Sathyanarayan Katha – Stories of Devotion, Trials, Grace, and Liberation

For Telugu Script - Click Below Link

ஸ்ரீ ஸத்யநாராயண ஸ்வாமி விரத கதா

(తెలుగు పారాయణం – தமிழ் எழுத்தில்)

முதல் அத்தியாயம்

நைமிசாரண்யத்தில் கூடிய சௌனகாதி முனிகள் ஸூதரை பார்த்து பூவுலகில் மக்கள் எவ்விரதத்தை அனுஷ்டித்தால் நிம்மதியாக வாழ்வார்கள் என்று கேட்க, அதற்கு ஸூதர் நீங்கள் கேட்ட இதே கேள்வியையை நாரதர் ஸ்ரீ மஹாவிஷ்ணுவிடம் கேட்க, அதற்கு நாராயணர் தானே நாரதரிடம் கூறிய ஸத்யநாராயண விரதத்தைப் பற்றி கூறினார். அதாவது பௌர்ணமி, ஏகாதசி, மாதபிறப்பு போன்ற நாட்களில் இந்த விரதத்தை அனுஷ்டிப்பது விசேஷ பலனளிக்கும். இந்த விரதம் அனுஷ்டிக்கும் நாட்களில் விடியற்காலையில் எழுந்து அன்றாட கடமைகளை முடித்து, பூஜை அறையை சுத்தம் செய்து, கோலமிட்டு, வாழை இலையில் அரிசியை பரப்பி (மூன்று அல்லது ஒன்று) அதன் மீது கலசங்களை வைத்து, முதலில் பஞ்சலோகபாலகர்கள், பிறகு அஷ்டதிக் பாலகர்களுக்கு பூஜை செய்து, அதன்பிறகு ஸத்யநாராயணரை கலசத்தில் ஆவாஹனம் செய்து பூஜிக்கவும். இந்த பூஜையை நான்கு வர்ணத்தாரும், ஆண், பெண் இரு பாலர்களும் செய்யலாம். தன் உறவினர்கள், சிநேகிதர்களுடன் கூடி செய்வது விசேஷம். வாழைப்பழம், பசும் பால், நெய், கோதுமை ரவை, சர்க்கரை இவை ஐந்தையும் சமவிகிதம் கலந்து ஸ்வாமிக்கு நிவேதிப்பது விசேஷம். பிறகு கதா சிரவணம்/ தாவாகப் படித்து முடித்த பிறகு பூஜை முடிந்ததும் பூஜை செய்வித்த அந்தணருக்கு தக்ஷிணையுடன் தாம்பூலமளித்து பிறகு அனைவரும் கூடி உண்ணுவது நலம். முடிந்தவர்கள் பாட்டு, நிருத்தம் போன்றவற்றுடன் கடவுளை மகிழ்விக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் ஸத்ய நாராயணர் மகிழ்ந்து விரதம் அனுஷ்டித்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவார். இது திண்ணம்.

 

முனிவர்களின் வேண்டுகோள்

நைமிசாரண்யம் என்ற புண்ணிய பூமியில் முன்னொரு சமயம் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி, பக்திக் கடலில் குளித்து, ஞானக் கடலில் தலை துவட்டி வந்த சௌனகாதி முனிகள் ஸூதரை அணுகிப் பணிந்து நின்று, "ஹே, முனிச்ரேஷ்டரே! எங்கள் விருப்பப்படி தாங்கள் கூறிய பகவானின் அவதார மகிமைகளையும் அதன் பயனையும் கேட்டு எங்கள் மனம் மகிழ்ச்சியடைந்தது. மேலும், இந்தப் பூலோகத்தில் பிறந்த மனிதர்கள், பகவானின் கருணையைப் பெற்று ஸகல ஐச்வர்யங்களையும் அடைந்து, தம் மனைவி மக்களோடும், பந்துக்களோடும் சேர்ந்து வாழ்ந்து முடிவில் அவன் பாதம் அடைய விரும்புவர்களேயானால் அவர்கள் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் எது? நம் புராணங்கள் போன்றவற்றில் அத்தகைய விரதம் ஏதாவது சொல்லப் பட்டு இருக்கிறதா? அங்ஙனம் இருப்பின் தங்களின் அமுதூறும் மொழியால் எம் போன்ற அடியவர்களுக்கு எடுத்துரைப்பீர்களாக" என்று கேட்டுக் கொண்டனர். ஸூதரும் அவர்களின் வேண்டுகோளை ஏற்றுத் 'தங்களின் மேன்மையான இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன், என்று கூறி முன்னொரு சமயம் நாரத மகரிஷி, பகவான் ஸ்ரீமன் நாராயணனிடம், "ஹே! நீலமேகவண்ணா! சதுர்ப்புஜங்களிலும், சங்கு சக்கரம், கதா, பத்மம் தரித்தவனே, மார்பில் வனமாலை தவழும் அழகா ஹ்ருதயத்தில் லக்ஷ்மியைக் கொண்டவனே! நான் என் சஞ்சாரத்தின் நடுவே ஒருநாள் பூலோகம் சென்றிருந்தேன். அங்கு மக்கள் தாங்கள் செய்த கர்மாக்களினால் பலவிதமான பிறவிகள் எடுத்து, எல்லையற்ற துன்பங்களை, அனுபவிப்பதைக் கண்டதும் என் மனம் வேதனை அடைந்தது. மக்கள் படும் அந்தத் துன்பங்களிலிருந்து அவர்களை விடுவித்து, அவர்களை இன்புற வைக்க என்மனம் எண்ணுகிறது. என்ன உபாயத்தினால் அவர்களின் பிறவித் துன்பங்களைப் போக்கி, அவர்களை இன்பமாக வாழவைப்பது என்பது தெரியாமல் தங்களை நாடி வந்துள்ளேன்! மூவுலகையும் காத்து ரக்ஷிப்பவனே! பக்த ரக்ஷகனே! மக்கள் அதிக சிரமமின்றி வாழ்வதற்கு ஓர் உபாயத்தைத் தாங்கள்தான் எடுத்துரைக்க வேண்டும் என்று பக்தி சிரத்தையோடு வேண்டி நின்றார். பகவான் நாரதரைப் பார்த்துப் புன்னகையுடன், "நாராயண நாராயண, என்ற என் பெயர் உரைத்தே நானிலத்திலும் புகழ் கொண்டவனே, மக்கள் அவர்களின் கர்ம வினையால் ஏற்படும் துன்பங்களைக் கண்டு உன் மனம் இரக்கப்பட்டு அவர்களுக்கு உதவ எண்ணுகிறாய். உன் எண்ணத்தை நிறைவேற்ற மக்கள் இன்புற்று வாழ நீ கேட்டது போல விரதம் ஒன்று இருக்கின்றது. அந்த விரதத்தின் பெயர்தான் ஸ்ரீ ஸத்யநாராயண விரதம். எவனொருவன் இந்த விரதத்தைப் பக்தியோடும், சிரத்தையோடும் மேற்கொண்டு வழிபடுகின்றானோ, அவன் என் அருளால் வாழ்வில் ஸகல ஐச்வர்யங்களையும் பெற்று, தன் குடும்பத்தோடும், பந்து மித்ரர்களோடும் வாழ்ந்து கடைசியில் மோக்ஷமெனும் ஸாம்ராஜ்யத்தை அடைவது திண்ணம்" என்றார்.

நாராயணன் கூறிய நல்லதொரு விரதம்

அதற்கு நாரதர், "அப்படி என்றால் இவ்விரதத்தை எப்பொழுது எப்படி அனுஷ்டிக்க வேண்டும், அதன் விதிமுறைகளை கூறி அருள வேண்டும்" என்று வேண்டினார். மஹாவிஷ்ணு, "நாரதா! இவ்விரதத்தை மாதத்தில் வரும் பௌர்ணமியன்றோ அல்லது வருடத்தில் ஒருமுறையோ அவரவர் சக்திக்கேற்ப அனுஷ்டிக்கலாம். மேலும், இந்த விரதத்தை ஏகாதசி, ரவிஸங்க்ரமண (மாதப்பிறப்பு) நாட்களில் அனுஷ்டிப்பது விசேஷம். விரதம் அனுஷ்டிப்பவர் விரதத்தை அனுஷ்டிக்கும் நாளன்று விடியற்காலையில் எழுந்து, அன்றாடத் தாம் செய்யும் கர்மங்களை முடித்துவிட்டு, பகவானை நோக்கி நமஸ்கரித்து, "ஹே ஸத்யநாராயண கடவுளே! உங்கள் அனுக்ரஹத்தை வேண்டி இந்த விரதத்தை அனுஷ்டிக்கிறேன். எனக்கு அனைத்திலும் வெற்றியளிப்பாயாக" என்று மனதில் ஸங்கல்பித்த பிறகு அன்று மாலை பூஜை அறையை சுத்தம் செய்து, கோலமிட்டு, அந்தக் கோலத்தை மஞ்சள் குங்குமத்தால் அலங்கரித்து, அதன்மீது மூன்று வாழை இலைகளை வைத்து, அதில் அரிசியை பரப்பி வெள்ளி, பித்தளை, அல்லது செம்பு என்று அவரவர் சக்திக்கேற்ப மூன்று கலசங்களை வைத்து, அதை பூரி யந்திரத்தால் அலங்கரிக்கவும். பிறகு ஸத்யநாராயணப் பிம்பத்தையோ, படத்தையோ கலசத்திற்கு முன் வைக்கவும். கலசத்தில் வருணனை ஆவாஹனம் செய்து, பிறகு மஞ்சள் பிள்ளையாரை பூஜித்த பிறகு பஞ்சலோகபாலக பூஜையை முதல் கலசத்திலும், நவக்கிரஹ பூஜையை நால்பத்தியிலும் வடக்கில் ஆரம்பித்து இந்திராதி அஷ்ட திக் பாலக பூஜையை அந்தந்த கடவுள்களுக்கேற்ற அதிரேவதை, ப்ரத்யதி தேவதைகள் எழுதியும் மூன்றாவது கலசத்தில் பூஜித்து பிறகு நடு கலசத்தில் ஸ்ரீ ஸத்யநாராயணனை பூஜிக்கவும். இந்த பூஜையை அனைத்து வர்ணத்தாரும் அனுஷ்டிக்கலாம். இந்த விரதத்தை மாலையில் அனுஷ்டிப்பது நலம். இந்த விரதத்திற்கு நிவேதனப் பொருட்களுடன் பசு நெய், பசும்பால், கோதுமை ரவை, சர்க்கரை, வாழைப்பழம் அனைத்தையும் சரிவிகிதம் சேர்த்து நிவேதிப்பது மிகவும் ஸ்ரேஷ்டம். பூஜையைத் தொடர்ந்து கதாச்ரவணம் அல்லது நூலாயே கதையைப் படிக்கலாம். பிறகு பூஜை செய்வித்த பிராமணருக்கு தக்ஷிணை ஸகிதம் தாம்பூலமளித்து, அவருடனும், பூஜைக்கு வந்த அனைவருடன் கூடி அவர்களும் உண்டால் ஸத்யநாராயணர் மகிழ்ச்சியடைந்து அவர்கள் விரும்பியதை அளித்து, வாழ்க்கையின் இறுதியில் ஸ்வர்க்க பிராப்தியும் அளிப்பார். தாம் விரும்பியதை எளிதாக பெறுவதற்கு இந்த விரதமே சிறந்த வழியாகும். அதுமட்டுமல்ல இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் துன்பம் தீர்ந்து, இன்பம் பெருகும். கணவன்-மனைவிக்கடையை ஒற்றுமை மேலோங்கும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிட்டும். பெண்கள் தீர்க்க ஸௌமாங்கல்யத்துடன் இருப்பார்கள். வியாபாரம் அபிவிருத்தி அடையும், கல்வி வளர்ச்சியடையும். எனவே, இவ்விரதத்தை ஒவ்வொருவரும் அனுஷ்டிக்க வேண்டும் என்று கூறினார். அதைக் கேட்ட நாரத மகரிஷி மகிழ்ந்து, "என் விண்ணப்பத்திற்கு விடையளித்த விண்ணின் நிறத்தலைவா! இந்த விரதத்தை முதன்முதலில் அனுஷ்டித்து உன்னருளை பெற்றவர் யார் என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன்!" என்றார். அதற்கு நாராயணன் நாரதருக்கு கூறியதை ஸூதர் ரிஷிகளுக்கு கூறத் தொடங்கினார். (இப்பூஜைக்கு வந்தவர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்று சொல்லப்படுவதற்கான காரணம் பகவான் அவர்களில் ஒருவராக எழுந்தருளி நம் உணவினை ஏற்றுக் கொண்டு நம் பூஜைக்கு ஏற்ற பலனை அளிப்பார் என்பது ஐதீகம்.)

 

இரண்டாவது அத்தியாயம்

முன்னொரு காலத்தில் ஏழை அந்தணன் ஒருவன் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தான். கடவுளையே நினைத்துக் கொண்டிருப்பதால் அவன் மீது இரக்கப்பட்ட மஹாவிஷ்ணு ஒரு வயோதிகர் வேடத்தில் அவன் முன் தோன்றி, ஸத்யநாராயண விரதத்தை அனுஷ்டிக்கும் முறையை உபதேசிக்க, அவனும் மறுநாள் தான் பிச்சை எடுத்து கிடைத்த பொருளால் தன் உறவினர் சகாக்களுடன் ஸத்யநாராயண விரதத்தை அனுஷ்டித்து ஸகல ஐச்வர்யங்களையும் பெற்றான். அவ்வாறு அந்தணன் ஸத்யநாராயண விரதத்தை அனுஷ்டிப்பது கண்ட ஒரு விறகுவெட்டி அந்தணனிடமிருந்து இந்த ஸத்யநாராயண விரதத்தை அனுஷ்டிக்கும் முறையை அறிந்து அவனும் அனுஷ்டித்து புத்ரபௌத்ராதிகளைப் பெற்று இறுதியில் மோக்ஷமடைந்தான்.

 

வறுமையை விரட்டிய விரதம்

தவறாமல் மழை பொழிந்து, செழித்து வளம் கொழிக்கும் காசிப் பட்டினத்தில் ஓர் ஏழைப் பிராமணன் வாழ்ந்து வந்தான். அவன் காலையில் எழுந்தவுடன் மஹாவிஷ்ணுவை வணங்கிய பிறகுதான் பல வீடுகளுக்குச் சென்று யாசித்து பொருள் தேடி வருவான். ஒருநாள் அவன் வழக்கம்போல் பகவானை மனதில் தியானித்துவிட்டு, பொருள் யாசித்துக் கொண்டு இருந்தான். சிறிது நேரத்தில் அவன் களைப்படையவே ஓர் மரத்தின் நிழலில் போய் அமர்ந்தான். அப்பொழுது, அவனுக்கு உதவ எண்ணிய பகவான், முதிய அந்தணர் வேடம் பூண்டு அவன் முன்தோன்றினார். பசியாலும், வறுமையாலும், உடல் மெலிந்து காணப்பட்ட அந்தப் பிராமணனை நோக்கி, "ஐயா, தங்களைப் பார்த்தால் மிகவும் வறுமையில் வாடுபவரைப் போல் தோன்றிறது. தங்களை இந்த நிலையில் பார்த்தால் எனக்கு மிகவும் மனம் வேதனையடைகிறது" என்றார். அதற்கு அந்த ஏழைப் பிராமணன், "ஐயா, என்னைப் பற்றித் தாங்கள் கவலைப் படுகிறீர்கள். ஆனால், அந்தப் பரந்தாமனுக்கு என்னைத் தெரியவில்லையோ என்னவோ? இப்படி பசியாலும், வறுமையாலும், நான் வாடுவதைக் கண்டும் அவன் மனம் இரங்காமல் என்னை ஏனோ இப்படி சோதிக்கிறான்? நான் என்ன பாவம் செய்தேனோ? இப்படி அவதிப்படுகிறேன். ஐயா பெரியவரே, தங்களைக் காணும்போது என் மனம் சிறிது நிம்மதியடைகிறது. அந்த நாராயணனே தங்கள் வடிவில் வந்ததுபோல் எனக்குத் தோன்றிறது. ஆகவே, தயவு செய்து நான் செய்த பாவங்கள் நீங்கி, புண்ணியம் பெற்று, நல்வாழ்வு வாழ ஏதாகிலும் ஓர் உபாயம் கூறுங்கள். அதன்படி நான் செய்கிறேன்" என்று நாதழுதழுக்க திக்கித்தணறிப் பேசி முடித்தான் அந்த ஏழைப் பிராமணன், வந்திருப்பது பகவான் என்று அறியாமல். அவன் கூறியதைக் கேட்ட முதிய அந்தணர் வடிவில் இருந்த பகவான், "ஐயா, தாங்கள் செய்த கர்மாக்களில் இருந்து விடுபட்டு, இன்புற்று ஸகல ஸௌபாக்கியங்களையும் பெற ஓர் உபாயம் சொல்கிறேன். ஸ்ரீமன் நாராயணனுக்கு "ஸத்ய நாராயணன்" என்ற பெயரில் ஒரு விரதம் உண்டு. அந்த விரதத்தை நீங்கள் முறையோடும், பக்தியோடும் அனுஷ்டிப்பீர்களேயானால், உங்கள் துன்பங்கள் அனைத்தும் நீங்கி, ஸகல ஸௌபாக்கியங்களும் பெற்று மனைவியோடும், பந்துமித்திரர்களோடும், இன்புற்று வாழ்வீர்கள்!" என்று கூறினார். அதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த அந்தப் பிராமணன், அந்தணரை நோக்கி, "பெரியவரே! தங்களின் இந்த வார்த்தையைக் கேட்டு, நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தாங்கள் கூறியபடி அந்த விரதத்தை அனுஷ்டிக்கிறேன். அதற்கான வழிமுறைகளைத் தயவு செய்து எனக்குக் கூறியருள வேண்டும்" என்றான். அதன்படியே பகவானும் ஸத்ய நாராயண விரதம் மேற்கொள்ளும் முறையை விவரமாக எடுத்துக்கூறி மறைந்தார். மறுநாள் தான் தொடங்கவிருந்த விரதத்தைப் பற்றியே நினைத்து நினைத்து அன்று இரவு முழுவதும் அந்தப் பிராமணன் உறங்கவில்லை. நாளைக்கு எங்ஙனம் பொருள் தேடுவது? எப்படி நாம் பகவானுக்கு நைவேத்யம் செய்வது? என்று எண்ணி மனம் குழம்பியவனுக்கு நினைவுக்கு வந்தவை பிராமண உருவில் வந்த பகவான் கூறிய அந்த வார்த்தைகளே. 'பகவானை பூஜிப்பவர்கள் பலகாரங்கள் இனிப்புப் பண்டங்கள் வைத்து, மேளவாத்தியம் வைத்தும் மிக ஆடம்பரமாக பூஜை செய்ய வேண்டும் என்பதில்லை. முடிந்தால் வெற்றிலை பாக்கும், புஷ்பமும், பழமும் வைத்துப் பூஜை செய்யலாம். அதுவும் முடியாதவர்கள் அவரது நாமம் உச்சரித்துத் தூய நீரைப் படைத்தாலும் போதும், அவர்களின் பூஜையை பகவான் மிகவும் அன்புடன் ஏற்றுக் கொள்வான்' என்ற வார்த்தைகளே அவன் காதில் ஒலித்தன. ஆதவன் உதயத்தால் அந்நகரம் விழித்தது. அவனும் விழித்தான். வழக்கம்போல் அந்தப் பிராமணன், பகவானை மனதில் தியானித்துப்பொருள் யாசிக்கச் சென்றான். அன்று அவனுக்கு அவன் எதிர்பார்த்ததைவிட அதிகமான பொருள் கிடைத்தது. தன் இல்லம் திரும்புகையில் அவன் கிடைத்த பொருள் கொண்டு அன்று அவன் செய்ய இருந்த ஸத்ய நாராயண பூஜைக்குத் தேவையான பொருட்களை வாங்கி வந்தான். வீட்டுக்கு வந்ததும் குளித்து முடித்து, பந்துக்களை அழைத்து வாங்கி வந்த பொருட்களை வைத்து மிகவும் பக்தி சிரத்தையோடு ஸத்ய நாராயண விரதத்தை மேற்கொண்டான். பின்பு பூஜை முடித்துப் பகவானுக்கு நைவேத்யம் செய்த ப்ரஸாதத்தை அனைவருக்கும் கொடுத்து தானும் புசித்து மகிழ்ந்தான். அன்றிலிருந்து அவனுடைய வாழ்வில் பல மாற்றங்கள் வந்தன. அந்தப் பிராமணனுக்கு உயர்ந்த இடத்தில் ஒரு வேலை கிடைத்தது. அன்றிலிருந்து அவன் மாதம் தவறாது, பௌர்ணமியன்று பிரதோஷ காலத்தில் (ஸாயங்காலத்தில்) ஸத்ய நாராயண விரதத்தைச் செய்து வந்தான். தன் மனைவியோடும் குழந்தையோடும் நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ்ந்து பின் அவன் மோட்சமெனும் ஸாம்ராஜ்யத்தை அடைந்தான். இவ்வாறு ஸூதர் சொல்வதையே கேட்டுக்கொண்டு தங்களையே மறந்தவர்களாயினர் ரிஷிகள். இந்தக் கலியுகத்தில் மக்கள் இன்புற்று இருக்கவே பகவான் நாரதரிடம் இந்த அற்புத விரதத்தைக் கூறினார் என்றுரைத்தார். அதைக் கேட்ட முனிவர்கள் ஸூதரை பார்த்து, மஹரிஷியே! ஸத்ய நாராயண விரதத்தை பகவானிடம் இருந்து முதல் முதலில் தெரிந்து கொண்டவன் அந்த ஏழைப் பிராமணன். அவனிடம் இருந்து அந்த விரதத்தை அறிந்து கொண்டவர் யார் என்பதை கூறுவீர்களாக என்றனர். ஸூதரும் கூறத் தொடங்கினார்.

விறகு வெட்டிக்கு விளைந்த நன்மை

பகவானின் திருவாயால் சொல்லப்பட்ட ஸத்யநாராயண விரதத்தை ஒரு பௌர்ணமியன்று பிரதோஷ காலத்தில் தன் பந்துமித்திரர்களுடன் கூடி அனுஷ்டித்துக் கொண்டிருந்தான். அச்சமயம், விறகு வெட்டி ஒருவன் ஊரைச் சுற்றி விறகு விற்றதன் காரணமாக மிகவும் களைத்தவனாய், தண்ணீர் அருந்துவதற்காக எதேச்சையாக அந்த பிராமணன் வீட்டிற்கு வந்தான். அப்போது அங்கு ஸத்யநாராயண விரதம் அனுஷ்டிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. பூஜை முடிந்ததும், நைவேத்யப் பொருள்களை அனைவருக்கும் கொடுத்து வந்த பிராமணன், அந்த விறகு வெட்டிக்கும் பிரசாதம் அளித்தான். அதைப் புசித்தான். பின் அங்கு இருந்தவர்கள் அனைவரும் சென்ற பின், பிராமணனை அணுகி, "ஐயா! தங்கள் இப்பொழுது அனுஷ்டித்த பூஜையின் பெயர் யாது? அதை எப்படிச் செய்வதென்றும் தெரிவித்தீர்களேயானால் நானும் இவ்விரதத்தை அனுஷ்டிப்பேன். அதன்மூலம் என் கஷ்டங்கள் தீருமென்று நம்புகிறேன்" என்று கேட்டார். அதற்குப் பிராமணன், அவனுக்கு உணவளித்து, தான் மேன்மையடைந்து நன்மையை அடைந்த ஸத்யநாராயண விரதத்தை எடுத்துக் கூறினான். அதைக் கேட்ட விறகு வெட்டியும் பிராமணனுக்கு நன்றி கூறி, தானும் அவ்வவிரதத்தை மேற்கொள்ளப் போவதாகக் கூறிச் சென்றான். மறுநாள் காலை விறகுவெட்டி வழக்கம்போல விறகுக் கட்டைகளைச் சுமந்து கொண்டு அதை விற்பதற்கு நகரம் நோக்கிச் சென்றான். அன்று அவன் விறகுகள் அனைத்தும் விற்றுவிட்டன. அதில் கிடைத்த பணத்தை வைத்துக் கொண்டு ஸத்யநாராயண பூஜைக்குரிய பொருட்களை வாங்கி வந்து ஸத்யநாராயண விரதத்தை அனுஷ்டித்தான். இவ்வாறு மாதம் தவறாமல் விறகுவெட்டி ஸத்யநாராயண விரதத்தை அனுஷ்டித்து வந்தமையால் அவன் கஷ்டம் நீங்கியது. செல்வம் பெருகியது. அவன் வாழ்வில் மகிழ்ச்சி நிலவியது. அவன் சந்ததியினரோடு கூடி வாழ்ந்து, எவ்விதக் குறையுமின்றி உலகில் வாழ்ந்து கடைசியில் மோட்சமெனும் ஸாம்ராஜ்யத்தை அடைந்தான். இவ்வாறு விறகு வெட்டியைப் பற்றிய கதையைக் கூறி முடித்தார் ஸூதர். பின்பு ரிஷிகளைப் பார்த்து, "இப்பொழுது நான் உங்களுக்கு ஸத்யநாராயணனின், விளையாட்டில் மற்றொரு கதையைக் கூறுகிறேன் கேள்" என்று கூறத் தொடங்கினார்.

 

மூன்றாவது அத்தியாயம்

பிறகு முனிவர்களிடம் ஸூதர், ஸத்யநாராயண விரதத்தால் பலன் பெற்ற வேறொருவரின் கதை கூறுமாறு வேண்ட, அதற்கு ஸூதர் கூறிய கதை: ஒரு தந்தை போல் தன் மக்களைக் காக்கும் உல்காமுகன் என்ற அரசன் பத்ரசீலா நதிக்கரையில் தன் உறவினர்களுடன் கூடி ஸத்யநாராயண விரதத்தை அனுஷ்டித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த ஸாது என்னும் வணிகன் அதைக் கண்டு ராஜாவை அணுகி அவ்வவிரதத்தின் விவரத்தை அறிந்து, தன் இல்லம் வந்தவுடன் தன் மனைவியிடம் அந்த விரதத்தைப் பற்றிக் கூறி, தமக்கு குழந்தை பிறந்தால், ஸத்யநாராயண விரதத்தை அனுஷ்டிப்பதாக ஸங்கல்பித்துக் கொண்டான். பிறகு அவருக்குப் பெண் குழந்தை பிறக்க, கலாவதி என்று பெயரிட்டு அருமை பெருமையுடன் வளர்த்து வந்தான். அவளுக்கு விவாகமும் செய்யும் வயது வந்ததும் மனைவி ஸத்யநாராயண விரதத்தை நினைவுபடுத்த விவாகமும் முடிந்ததும் செய்யலாம் என்றான். விவாகம் முடிந்தது மாப்பிள்ளையும் இவர் வீட்டுடனே தங்கி வியாபாரத்தைக் கவனிக்கலானான். இந்த மாயையில் ஸாதுவும் கலாவதியும் ஸத்யநாராயண விரதத்தைப் பற்றி மறந்தே போனார்கள். அவர்களுக்கு அதை நினைவூட்ட அவர்களை சோதனைக்குள்ளாக்கினார் ஸத்யநாராயணர். வியாபார நிமித்தம் வெளிநாடு சென்ற ஸாதுவும் மருமகன் சுந்தரமும் ஓர் இடத்தில் நின்று கொண்டிருக்க திருடர்கள் அரச பொக்கிஷத்திலிருந்து திருடி வந்த பொருள்களை இவர்முன் போட்டு விட்டு ஓட, தொடர்ந்து வந்த காவலர்கள் இவர்களை திருடர்களாக பாவித்து, சிறையில் அடைத்தனர். இங்கோ இவர்கள் போன வழி தெரியாமலும், இருக்கும் செல்வமனைத்தும் கள்வர்களால் கவரப்பட, ஏழ்மையடைந்த லீலாவதியும் கலாவதியும் பிச்சை எடுத்து பிழைக்கலானார்கள். ஒருமுறை பிச்சை எடுக்க ஒரு வீட்டுமுன் நின்ற கலாவதி அவர்கள் செய்யும் ஸத்யநாராயண பூஜையைக் கண்டு பிரசாதத்துடன் வீடு திரும்பினாள். எதற்காக இவ்வளவு நேரமாகியது என்று கேட்ட தாயிடம் நடந்ததைக் கூற, தாயும் தன் தவறை உணர்ந்து, இருக்கும் பொருளைக் கொண்டு ஸத்யநாராயண பூஜையைச் செய்ய, திருப்தி யடைந்த ஸத்யநாராயணர், மஹாராஜாவின் கனவில் தோன்றி அவர்களை விடுவித்து மன்னிப்பு கேட்டு மரியாதையுடன் அவர்களை ஊருக்கு அனுப்புமாறு கட்டளையிட, ராஜாவும் அவ்வாறே செய்தார். இருவரும் தம் ஊரை நோக்கிச் சென்றனர்.

 

மகளைக் கொடுத்த மஹா விரதம்

முன்னொரு காலத்தில் பகவானிடம் மிக்க பக்தியுள்ளவனும் பிறருக்கு அறம் செய்து வாழ்வதில் மகிழ்ச்சியும் கொண்டு, நாற்புறமும் புகழ்பெற்று விளங்கிய ஸத்தியவாக்கு உடையவனான 'உல்காமுகன்' என்னும் அரசன் ஒருவன் இருந்தான். அவன் தினமும் பகவானின் ஆலயத்திற்குச் சென்று அவனைத் தரிசித்து அங்குள்ள பிராமணர்களுக்குத் தானம் செய்து அவர்களை மகிழ்விப்பான். அவன் ஒருநாள் பத்ரசீலா நதிக்கரையோரம் தன் ரூபவதியான பத்தினியுடனும், உறவினர்களோடும் கூடி ஸத்யநாராயண விரதத்தை அனுஷ்டித்துக் கொண்டிருந்தான். அப்போது வியாபாரத்திற்காகக் கொண்டு வரும் பொருள்களை ஓடத்தில் ஏற்றிக்கொண்டு அந்த நதிக்கரை ஓரமாக வந்த "ஸாது" என்னும் வணிகன், அங்கு மஹாராஜா அனுஷ்டித்துக் கொண்டு இருக்கும் விரதத்தைக் கண்டு ஓடத்தை நிறுத்தி விட்டு இறங்கி வந்தான். மஹாராஜா தன் பூஜையை முடித்து, ப்ரஸாதத்தை வழங்க ஸாதுவிடம் வந்தபோது, அவரைப் பார்த்து, "மஹாராஜா, தாங்கள் இப்பொழுது அனுஷ்டித்த விரதத்தைப் பற்றி எனக்குத் தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கிறது. எனவே, என் ஆசையை நிறைவேற்றுங்கள்" என்றார். அதற்கு மஹாராஜா, "வியாபாரியே! இப்பொழுது நான் அனுஷ்டித்த விரதத்தின் பெயர் 'ஸத்யநாராயண விரதம்' என்பதாகும். எனக்கும், என் மனைவிக்கும் திருமணம் நடந்து ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை எங்களுக்குப் புத்திர பாக்கியம் இல்லை. எனவே இந்தப் பூஜை அனுஷ்டிப்பதன் மூலம் குழந்தை பாக்கியம் உண்டாகும், என்று பெரியோர்கள் கூறியதன் பேரில் இந்தப் பூஜையை அனுஷ்டித்து வருகிறேன்" என்றார். மஹாராஜா கூறுவதை மிகக் கவனமாகக் கேட்டுவந்த வணிகன், "மிக்க நன்றி மஹாராஜா! தாங்கள் கூறிய இந்த விரதத்தைக் கேட்டு என் மனம் மகிழ்ச்சியடைகிறது. இதற்குக் காரணம் நாங்களும், நீண்ட நாட்களாகக் குழந்தை இல்லாமல் இருக்கிறோம். எனவே நாங்களும் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் எங்களுக்கும் குழந்தைப்பேறு உண்டாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது" என்று மஹாராஜாவுக்கு நன்றி கூறித் தன் ஓடத்தில் ஏறி அமர்ந்து அவன் பயணம் செய்ய இருந்த இடத்தை விடுத்து ஓடத்தைத் திருப்பித் தன் ஊரை நோக்கி ஓட்டிச் சென்றான். தன் ஊரை அடைந்ததும் தன் இல்லம் சென்று தன் மனைவியிடம் "என் பிரியமானவளான லீலாவதியே! உனக்குப் புத்திர ஸந்தானம் உண்டாவதற்கு நான் ஒரு விரதம் தெரிந்து கொண்டு வந்துள்ளேன். அதை நாம் அனுஷ்டிக்க வேண்டும்" என்று கூறி, தான் மஹாராஜாவிடம் இருந்து தெரிந்து கொண்ட ஸத்ய நாராயண விரத பூஜையையும் அதன் முறைகளையும் அனுஷ்டிக்கும் விதத்தையும் எடுத்துக் கூறிய ஸாது, "நமக்குக் குழந்தை பாக்கியம் கிட்டினால் நாம் அந்த ஸத்யநாராயண விரதத்தை அனுஷ்டிப்போம்" என்று கூறித் தன் வேலைகளை கவனிக்கத் தொடங்கிவிட்டான். நாளடைவில் அவன் மனைவியும் ஸத்யநாராயணன் அருளால் பத்துமாதத்தில் ஓர் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். குழந்தை பிறந்ததும் ஸாதுவிற்கும் அவன் மனைவிக்கும் அளவற்ற மகிழ்ச்சி. குழந்தைக்கு நல்ல பெயர் ஒன்று தேடி 'கலாவதி' என்ற பெயரும் சூட்டினர். கலாவதியும் தொட்டால் வாடும் பூமேனியை கொண்டு கொள்ளையழகுடன் நாளொரு மேனியும் பொழுதொருவண்ணமுமாக எந்தவிதத் துன்பமும் இல்லாமல் வளர்ந்து வந்தாள். ஒருநாள் ஸாதுவின் மனைவி ஸாதுவை நோக்கி, "நாதா! நமக்குக் குழந்தை பிறந்தவுடன் ஸத்யநாராயண விரதத்தை அனுஷ்டிப்பதாகச் ஸத்தியம் செய்திருக்கிறோம். நமக்கு பிறந்த நம் மகள் கலாவதிக்கும் திருமணம் செய்ய வேண்டிய வயது வந்துவிட்டது. ஆனால், நாம் ஸங்கல்பம் செய்த ஸத்யநாராயண விரதத்தை இன்னும் அனுஷ்டிக்கவில்லை!" என்று மறந்திருந்த ஸாதுவிற்கு நினைவூட்டினாள். அதற்கு வணிகனும், "நாம் அந்த விரதத்தைச் செய்ய வேண்டியது அவசியம்தான். ஆனால் இப்பொழுது நான் பெண்ணுக்குத் தகுந்த வரன் தேடிக் கொண்டிருக்கிறேன். எனவே அவள் திருமணத்தின் போது பூஜையை விமரிசையாகச் செய்யலாம்" என்று கூறினான். தன் மகள் கலாவதிக்குத் ஸகல குணமும், செல்வமும், வணிகனுமான ஒரு மணமகனைத் தேடி வருமாறு தன் வேலையாட்களை பல இடங்களுக்கும் சென்று வரும்படி அனுப்பி வைத்தான். அவர்களும் பல இடங்களுக்குச் சென்று, இறுதியில் 'காஞ்சனம்' என்னும் ஊரில் கல்வி, குணம், பண்பாடு ஆகியவற்றில் கலாவதிக்கு நிகரான 'சுந்தரம்' என்ற வணிகனை அவன் பெற்றோர் சம்மதத்துடன் நிச்சயித்தனர். நல்லதொரு முகூர்த்தத்தில் தன் ஒரே மகளான கலாவதிக்கு சுந்தரத்துடன் மிகவும் சிறப்பாகத் திருமணத்தை நடத்தி வைத்தான். அந்தச் சிறப்பான திருமணத்தின் போது செய்வதாக இருந்த ஸத்யநாராயண விரதத்தை வேலைப்பளுவால் இருவரும் மறந்தனர். பொதுவாகவே, மனிதனின் குணம் தொடர்ச்சியாக சந்தோஷத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும்போது, சந்தோஷம் வருவதற்கு காரணமாக இருப்பவரை மறந்துவிடுகிறது.

மறதியால் வந்த சோதனை

தன் மகளுக்குத் திருமணம் செய்த ஸாது தன் மருமகனையும் தன்ன உடனே வைத்துக் கொண்டான். இருவரும் சேர்ந்தே வியாபாரத்தை கவனிக்கத் தொடங்கினர். தன் மகள் திருமணத்தின் போது "ஸத்யநாராயண விரதத்தை செய்வேன்" என்று கூறி நாளடைவில் அதை மறந்து போன வணிகன் ஸாதுவிற்கு, அவனின் தவற்றை எடுத்துக் காட்டினால்தான் விரதம் அனுஷ்டிப்பான் என்றெண்ணிய பகவான் அவனை சோதிக்கலானார். சில நாட்கள் சென்றபின் ஒரு நாள் ஸாதுவும், சுந்தரமும் வியாபார விஷயமாக வெளியூர் சென்று வருவதற்காகக் கப்பலில் பொருள்களோடு, தன் மனைவிமார்களிடம் விடைபெற்றுச் சென்றனர். ஸாதுவிற்கோ ஸத்யநாராயண விரதமே மறந்து போய்விட்டது. சிந்து நதிக்கரையிலுள்ள 'ரத்னஸாநுநகரம்' என்ற பட்டணத்தை 'சந்திரகேது' என்னும் அரசன் ஆண்டு வந்தான். அந்தப் பட்டணத்தில் தான் ஸாதுவும், சுந்தரமும் ஒரு சத்திரத்தில் தங்கியிருந்தனர். அப்பொழுது சில கள்வர்கள் அரச பொக்கிஷத்தில் இருந்து பொருள்களைக் களவாடி விட்டனர். அவர்களைக் கண்ட காவலர்கள் அவர்களைத் துரத்தினர். அந்தச் சமயம் அந்த கள்வர்கள் காவலர்களின் கையில் அகப்படாமல் ஓடினார்கள். அந்த வழியே வந்து கொண்டிருந்த ஸாது மற்றும் அவன் மருமகன் சுந்தரத்தின் அருகில் அந்தப் பொருள்களைப் போட்டுவிட்டு ஓடிவிட்டனர். இவர்களின் அருகில் பொருள்களைக் கண்ட காவலர்கள், "ஓடிய கள்வர்கள் இவர்கள்தான்" என்றெண்ணி அவர்களைக் கைது செய்து, அரச சபைக்கு அழைத்துச் சென்றனர். அரசன் அவர்களின் கையில் தன் இராஜாங்கப் பொருள் இருப்பதைக் கண்டதும் ஏதும் விசாரிக்காமல், அவர்களையும் பேசவிடாமல் பாதாளச் சிறையில் அடைக்கும்படி ஆணையிட்டான். அதுமட்டுமின்றி, இராஜாங்கத்தில் களவாடப்பட்ட பொருள்களைத் தவிர, அவர்கள் வியாபாரத்திற்காகக் கொண்டுவந்த பொருள்களையும், பணத்தையும் தன் வயப்படுத்திக் கொண்டான். இதைப் போலவே வணிகனின் வீட்டிலும் பொன்னும் பொருள்களும் களவாடப்பட்டன. கலாவதியும் லீலாவதியும் நிர்க்கதியாகி விட்டனர். என்ன செய்வதென்று தெரியாமல், தன் கணவன்மார்களின் நிலையை அறிய முடியாமல், உண்ண உணவும், உடுக்க உடையும் இல்லாமல் கஷ்டப்பட்டனர். சில சமயங்களில் தண்ணீர் மட்டும் குடித்துப் பசியைத் தீர்த்துக் கொண்டனர். செல்வம் குவிந்தபோது அவர்களுடன் உறவாடியவர்கள் இப்பொழுது வற்றிவிட்ட குளமான அவர்களை மதிப்பதும் இல்லை, நினைப்பதுமில்லை. இந்த நிலையில் ஸாதுவின் மகள் பசிதாளாமல் பிச்சை எடுத்து வரப் புறப்பட்டாள். அந்தச் சமயம் ஒரு பிராமணன் வீட்டில் "ஸத்யநாராயண விரதம்" நடைபெறுவதைக் கண்டு மெய்யுருகி நின்றுவிட்டாள். மேலும் அங்கு கூறப்பட்ட கதையையும், மகிமையையும் கேட்ட போதே அவள் பாதிப்புண்ணியத்தைப் பெற்றவளானாள். கடைசியில் அனைவருக்கும் கொடுக்கப்பட்ட பிரசாதம் தனக்கும் கொடுக்கப்பட்டதும் அதைப் பெற்றுக் கொண்டு வீடு திரும்பினாள். தன் மகளைக் காணாமல் தவித்துக் கொண்டிருந்த ஸாதுவின் மனைவி, "இவ்வளவு நேரம் எங்கே சென்றாய்?" என்றவள் மகள் கையில் பிரசாதம் இருப்பதைக் கண்டு 'அது என்ன?' என்று வினவினாள். அதற்குக் மகள் கலாவதி, "அம்மா! என்னால் பசியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பிச்சை எடுத்து வரலாம் என்று புறப்பட்டுச் சென்றபோது, வழியில் ஒரு பிராமணன் வீட்டில் 'ஸத்யநாராயண பூஜை' நடந்து கொண்டிருப்பதைக் கண்டு, பூஜை முடியும் வரை அங்கேயே இருந்தேன். பூஜை முடிந்ததும் கதையைக் கேட்டு ப்ரஸாதத்தைப் பெற்றுத் திரும்பினேன். அந்தப் பிராமணன் கூறிய வார்த்தைகளைக் கேட்டதும் எனக்கும் கூட அந்த "ஸத்யநாராயண விரதத்தை" அனுஷ்டிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது!" என்று கண்ணீர் மல்கக் கூறினாள். பின்னர் தான் கொண்டு வந்த பிரசாதத்தைத் தாயிடம் கொடுத்துத் தானும் புசித்தாள். அப்பொழுது கலாவதிக்கு தாம் அனுஷ்டிக்க மறந்த ஸத்ய நாராயண விரதம் பற்றி நினைவுக்கு வந்தது. உடனே லீலாவதி, தன் இரு கைகளையும் கூப்பி கண்மூடி ஒரு நிமிடம் பகவானைத் தியானித்து, "ஓ ஸத்யநாராயண ப்ரபோ! உன்னால் காக்கப்படும் நாங்கள் செய்த தவற்றின் காரணமாக இன்று வரை பட்ட துன்பங்கள் போதும். இனியும் எங்களைச் சோதிக்காதே. என் கணவனையும், மருமகனையும் மிக விரைவில் வீடு திரும்ப அருள் செய்வாயாக! நான் இந்த விரதத்தை அனுஷ்டிக்கிறேன்" என்று வேண்டிக் கொண்டாள். மறுநாள் காலை அவள் எழுந்ததும் குளித்து முடித்து ஸத்யநாராயண விரதத்தை அனுஷ்டிக்க எண்ணி பகவானின் நாமத்தைத் தியானித்துத் தன்னிடமிருக்கும் பொருட்களைக் கொண்டு தன் உறவினர்களுடன் கூடி ஸத்யநாராயண பூஜையைப் பக்தியோடும் சிரத்தையோடும் நடத்தி முடித்து, வந்தவர்களுக்குப் பிரசாதம் அளித்து, அவர்களை வழி அனுப்பி வைத்தாள். அவள் பூஜையை ஏற்று மனம் இறங்கிய பகவான் அவர்களுக்கு அருள் புரிய எண்ணினார்.

 

நான்காம் அத்தியாயம்

ராஜாவால் விடுவிக்கப்பட்டு பல பரிசுகளுடன் கப்பலில் நாடு திரும்பிய ஸாதுவும் அவருடைய மருமகனும் நித்யானுஷ்டானத்திற்காகக் கப்பலை ஒரு ஓரம் நிறுத்த வயோதிகர் வேடத்தில் அங்கு வந்த ஸத்யநாராயணர் கப்பலில் என்ன இருக்கிறது என்று அவர்களிடம் கேட்க, அவர்களும் காய்ந்த இலைகள்தான் உள்ளன என்றனர். அப்படியே ஆகட்டும் என்று சென்றுவிட்டார் பகவான். அவர்கள் திரும்பிவந்து தம் கப்பலில் காய்ந்த இலைகள் இருப்பதைக் கண்டு, தம் தவறை உணர்ந்து அவரிடம் சென்று மன்னிப்பு கேட்க, அவரும் ஸ்ரீ ஸத்யநாராயண பூஜையை மறந்ததன் விளைவாகத்தான் இத்துன்பத்தை அனுபவிக்கின்றனர் என்றும், அதை அனுஷ்டிப்பதாக ஸங்கல்பித்துக் கொள்ளும்படியும் கேட்க, அவர்களும் அவ்வாறே செய்து தம் பொருள்களைப் பெற்றனர். அவர் ஊர் திரும்பியதும், நதிக்கரையில் வேலை செய்து கொண்டிருக்கும் வேலையாட்களை அழைத்து தாம் வந்த விஷயத்தைக் கூறி தம் மனைவி மகளை அழைத்து வருமாறு கூறினான். வேலையாள் சென்று கூறும்போது ஸத்யநாராயண விரதம் செய்து கொண்டிருக்கும் லீலாவதியும், கலாவதியும் பூஜை முடித்து வருவதாக கூறினர். பூஜை முடிந்ததும் தன் கணவனை காணும் அவசரத்தில் கலாவதி ப்ரஸாதம் உண்ண மறந்தாள். அவள் நதிக்கரையை அடைந்ததும் அவளுடைய கணவர் கப்பலுடன் காணாமல் போனார். இதை அறிந்ததும் மூர்ச்சையடைந்து மகளை கண்டு பகவானை வேண்ட, ஸத்யநாராயணர் "உன் மகள் என் ப்ரஸாதத்தை உண்ண மறந்ததால் தான் இந்த நிலை" என்றார். அவளும் வீட்டிற்குச் சென்று ப்ரஸாதம் உண்டு திரும்ப, தன் கணவனை கப்பலுடன் கண்டாள். அந்த மகிழ்ச்சியில் ஸாதுவும் அங்கேயே தன் பந்துக்களுடன் கூடி ஸத்யநாராயண விரதத்தை மேற்கொண்டு வீடு திரும்பினான். அன்றிலிருந்து அவர்களின் வாழ்க்கையில் ஆனந்தமே ஆனந்தம் அவர்களும் ஒவ்வொரு பௌர்ணமியன்றும் ஸத்யநாராயண விரதத்தை மேற்கொண்டு இறுதியில் முக்தியடைந்தனர்.

 

வியாபாரி கண்ட விஸ்வரூப தரிசனம்

மறுநாள் காலை விடிந்ததுமே, சந்திர கேது அரசன் ஸபையைக் கூட்டி, சிறையில் இருந்த ஸாதுவையும் அவன் மருமகனையும் விடுதலை செய்யும்படி கட்டளையிட்டது அனைவருக்கும் வியப்பாய் இருந்தது. மேலும் சிறைக் காவலர்களும் ஏதும் புரியாமல் விழித்தனர். இந்த அரசனுக்கு என்ன வந்துவிட்டது! இன்று திடீரென்று இப்படி விடிவதற்குள் ஸபையைக் கூட்டிச் சிறையில் உள்ள வியாபாரியை விடுதலை செய்யுங்கள் என்று கூறுகிறாரே, என்று வியந்தவர்களாய் வியாபாரிகளை விடுதலை செய்தனர். அரசர் மேலும் தமக்கு என்ன சிறை விதிக்கப் போகிறாரோ என்று பயத்துடன் அரசவைக்குள் பிரவேசித்த ஸாதுவையும், சுந்தரத்தையும் கண்ட அரசர், "நேற்று என் கனவில் ஸத்யநாராயணர் தோன்றி, நீங்கள் வியாபாரிகள் என்றும் நீங்கள் பொருள்களைத் திருடவில்லை என்றும் நீங்கள் தெய்வத்தை அலட்சியப்படுத்தியதன் காரணமாகத்தான் அவர் உங்களை சோதனைக்கு ஆளாக்கியதாகவும் கூறினார். தற்போது நான் உங்களை விடுதலை செய்யாவிட்டால் அவர் கோபத்திற்கு நான் ஆளாவேன். ஆகவே, தயவு செய்து நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்' என்று வேண்டினான். வியாபாரியும், "ஐயா, நான் உங்களை மன்னிப்பதா! நான் செய்த தெய்வக் குற்றத்திற்கு அவரின் கோபத்திற்கு ஆளானேன். அவர் லீலையை யாரால் புரிந்து கொள்ள முடியும்" என்று கூறினான். உடனே ராஜா, "ஐயா, நான் உங்களைத் தண்டித்ததன் காரணமாக இன்று என் விருந்தாளியாக இருந்து விடிந்ததும் நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள்" என்றான். "ஸாதுவும் அரசே தங்களின் விருப்பப்படி இன்று உங்களின் விருந்தாளியாகத் தங்கிப் புறப்படுகிறேன். நாங்கள் வியாபாரம் செய்யப் புறப்பட்டு, ஊரை விட்டு வந்து அதிக நாட்கள் ஆகின்றன, என் மனைவியும், மகளும் என்ன கஷ்டப்படுகிறாரோ தெரியவில்லை. நான் எவ்வளவு விரைவில் திரும்ப முடியுமோ அவ்வளவு விரைவில் திரும்ப வேண்டும்" என்று கூறினான். அரசனும் அவர்களை உபசரித்து, அவர்களிடமிருந்து பறித்த பொருள்களோடு, அவரைச் சிறை பிடித்த குற்றத்திற்காக மேலும் பொன்னும் பொருளும் கொடுத்து மறுநாள் வழி அனுப்பிவைத்தான். அதனைப் பெற்றுக் கொண்ட ஸாதுவும் அவன் மருமகனும் தங்கள் ஊரை நோக்கிப் புறப்பட்டனர். அவர்கள் கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த போது, ஸத்யநாராயணன் அவர்களைப் பரீட்சிக்க எண்ணினார். ஸாது ஓரிடத்தில் தன் கப்பலைக் கரையோரம் நிறுத்தி கரையோரம் நித்திய கர்மானுஷ்டானங்களைச் செய்து கொண்டிருந்த சமயம் அவன் முன் அந்தணராகத் தோன்றி, "தாங்கள் கப்பலில் என்ன வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டார். கேட்டது பகவான் என்று அறியாமல் அவரை யாசிப்பதற்காக வந்தவர் என்றெண்ணி, "ஐயா தங்களுக்குக் கொடுக்கும்படி கப்பலில் ஏதும் இல்லை. வெறும் காய்ந்த இலைகள் மட்டுமே உள்ளன" என்றனர். அதைக் கேட்ட நாராயணர் தன் இயல்பான புன்னகையுடன் "அங்ஙனமே, அவை இலைகளாகவே இருக்கட்டும்" என்ற கூறிச்சென்று ஒரு மரத்தடியில் நின்று கொண்டார். தம் அன்றாடக் கடமைகளை முடித்துவிட்டு ஸாதுவும், சுந்தரமும் கப்பலுக்குச் சென்றனர். கப்பலில் ஏறிய ஸாது அதில் தம் பொருளுக்கு பதிலாக இலைகள் இருப்பதைக் கண்டு மூர்ச்சையாகிக் கீழே விழுந்தான். அவனைத் தாங்கிப் பிடித்துத் தண்ணீர் தெளித்து மூர்ச்சையைத் தெளிய வைத்த சுந்தரம், "மாமா! இந்தக் கப்பலில் உள்ள பொருள்கள் மறைந்ததற்குக் காரணம், சற்று முன் வந்தாரே ஓர் அந்தணர், அவராகத்தான் இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. அவரிடம் நாம் பொய்கூறியதன் காரணமாக அவர் நம்மை ஸபித்திருக்கக்கூடும் அது பலித்துவிட்டது போலும், அவனைக் கண்டு நாம் மன்னிப்புக் கேட்டாலொழிய நாம் விமோசனம் பெற முடியாது. வாருங்கள், அந்த அந்தணர் இந்தப் பக்கம்தான் சென்றார். முதலில் அவரைத் தேடிப்போய் மன்னிப்புக் கேட்போம்" என்று ஸாதுவை அழைத்துச் சென்றான். ஸாதுவும் அப்படியும் இருக்கக்கூடும் என்றெண்ணி தன் மருமகனின் பின்னாலேயே சென்றான். ஒரு மரத்தின் நிழலில் அந்த அந்தணர் வடிவில் நின்றிருந்த பரந்தாமனைப் பார்த்து, "ஐயா இந்தப் பாவியை மன்னிக்க வேண்டும்!" என்று கண்ணீர் பெருக அந்த கார்மேகக் கண்ணனின் உலகளந்த பாதத்தைப் பிடித்துக் கதறினான். தன் இதழில் மெல்லிய புன்னகையைத் தவழவிட்ட பகவான், ஸாதுவைப் பார்த்து, "என்னப்பா வேண்டும்! ஏன் என் கால்களைப் பிடித்துக் கொண்டு கதறுகிறாய்! எழுந்திரு!" என்று அவனைத் தன் கையால் தூக்கி நிறுத்தி, "நீ பூஜையை மறந்து இருந்ததன் காரணமாகத்தான் இத்தனை துன்பங்களை அடைந்தாய். இப்பொழுது புரிகிறதா?" என்றார். அதைக் கேட்டு மிகவும் குழம்பிய ஸாது, "ஐயா! தங்களை யார் என்று என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. ஸதா ஸர்வகாலமும் தங்களையே நினைத்து தியானத்தில் மூழ்கித் தங்களை பூஜை செய்யும் ப்ரம்மாதி தேவர்களாலேயே தங்களை அறிய முடியாத அந்த பகவானாக இருக்கக்கூடும். ஆகவேதான் பூவுலகில் பிறந்து, அழியக் கூடிய மானிடப் பிறவி எடுத்து, இச்சையில் மூழ்கி உழன்று தவிக்கும் இந்த அடியவனால் தங்களை என்னால் அறியமுடியவில்லை என நினைக்கிறேன். எனவே தயவு செய்து தாங்கள் யார் என்பதை எனக்கு உணர்த்துங்கள்" என்று வேண்டினான். ஸாதுவின் வார்த்தைகளைக் கேட்ட பகவான் அவன் நிலைமை கண்டு, இரக்கப்பட்டு நீருண்ட மேகம்போல் கறுத்த நிற மேனி கொண்டு தாமரை மலரில் தோன்றிய திருமகளுக்குத் தலைவனாக வந்தருளியவனும், ஸர்வத்தையும் தன்னிடமே அடக்கிக் கொண்டு விளங்கும் நாராயணன், சங்கு, சக்கரம், கதா, பத்மம் தரித்தவனாய், தன்னை நாடிய அடியவர்களைப் பேணுபவனும், தன்னை மறந்தவர்களுக்கு அவர்களின் தவற்றை உணர்த்தித் திருத்துபவனுமான பரந்தாமன், அநேக ஆதித்யர்கள் ஒருங்கே பிரகாசிக்கும் போது உண்டாகிற பேரொளி போன்று ஸாதுவின் முன் தன் ரூபத்தைக் காட்டிய ஸத்யநாராயணன், "ஹே ஸாது! ஸத்யநாராயண விரதத்தை நீ கூறியபடி அனுஷ்டிக்காததின் காரணமாகத்தான் இத்தனை துன்பங்களையும் அடைந்தாய். இச்சமயம் எந்தன் தரிசனத்தால் உன் துன்பங்கள் நீங்கின. மனமகிழ்ச்சியோடு நீ உன் ஊர் திரும்பி ஸத்யநாராயண விரதத்தை அனுஷ்டித்து வருவாயாக! என்று சொல்லி மறைந்தார்.

மறதியால் வந்த வினை

ஊரை அடைந்து கப்பலைக் கரையோரம் நிறுத்திவிட்டு, அங்கு பணி செய்து கொண்டிருந்த வேலைக்காரன் ஒருவனை அழைத்து, தான் வந்திருப்பதாகத் தன் மனைவியிடமும், மகளிடமும் கூறி அவர்களை அழைத்து வருமாறு சொல்லி அனுப்பினான் ஸாது. வேலைக்காரன் ஓடிச்சென்று லீலாவதியிடம் தங்கள் கணவரும், கலாவதியின் கணவரும் பத்திரமாக ஊர் திரும்பிவிட்டனர். கப்பலில் நிறைய பொருட்களோடு கரையில் காத்துக் கொண்டிருக்கின்றனர். தாங்கள் வந்த விஷயத்தை உங்களிடம் கூறி உங்களை அழைத்து வருமாறு என்னிடம் சொல்லியனுப்பினார் என்றுரைத்தான். அதைக் கேட்ட லீலாவதியும், கலாவதியும் ஆதிபதிபாம் நாராயணனைத் தொழுது, "நாங்கள் செய்த ஸத்யநாராயண விரதத்தின் காரணமாகவே அவர்கள் பத்திரமாக வீடு திரும்பியுள்ளார்கள். கடவுள் எங்களைக் கைவிடவில்லை" என்று கூறி நாங்கள் இப்பொழுதே ஸத்யநாராயண பூஜையை முடித்துப் பிரஸாதத்துடன் அவர்களைக் காண வருகிறோம் என்று சொல்லி அனுப்பினாள். வேலைக்காரன் சென்றபின் பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்து புரோஹிதரை அழைத்துப் பூஜையை முடித்துக் கதைபடித்த பிறகு, லீலாவதி பிரஸாதத்தை உண்டு பின் கிளம்பினாள். தன் கணவனைப் பார்க்கவேண்டும் என்ற ஆவலில் இருந்த கலாவதியோ பிரஸாதத்தைச் சாப்பிடாமலேயே கிளம்பிவிட்டாள். தன் பிரஸாதத்தை உண்ண மறந்து தன் கணவனைக் காணச் சென்ற கலாவதியின் அலட்சியத்தை எடுத்துக் காட்ட எண்ணினார் நாராயணன். கரையை அடைந்ததும் லீலாவதி தன் கணவனைக் கண்டு மகிழ்ச்சியடைந்து தான் கொண்டு வந்த பிரஸாதத்தை ஸாதுவிடம் கொடுத்தாள். கலாவதியோ தன் கணவன் எங்கே என்று தன் கண்களால் தேடிக் கொண்டிருந்தாள். பிரஸாதத்தைப் பெற்றுக் கொண்ட ஸாது அதைப் பக்தியோடும் சிரத்தையோடும் நாராயணனை நினைத்துச் சாப்பிட்டான். லீலாவதி ஸாதுவைப் பார்த்து, "மருமகன் எங்கே?" என்று கேட்டாள். "அவன் கப்பலில் இருக்கிறான்" என்றான். மூவரும் அங்கு சென்றனர். அங்கு ஸாது நிறுத்தி வைத்துவிட்டு வந்த இடத்தில் கப்பலோடு மருமகனையும் காணாத லீலாவதி, "என்ன இது? இங்கு கப்பலையும் காணவில்லை, மருமகனையும் காணவில்லை" என்று புலம்பினாள். தன் கணவனைக் காணாத கலாவதி அங்கேயே மூர்ச்சையாகி விழுந்தாள். கலாவதியின் தாய் அவளை மடியில் கிடத்திக் கதறினாள், ஸாது மிகவும் மனம் நொந்து போய்விட்டான். "ஸ்வாமி இது என்ன சோதனை. இப்பொழுதுதான் நம் துன்பங்களைப் போக்கித் துக்கங்களையும் நீக்கிய ஸத்யநாராயண மூர்த்திக்குப் பூஜை முடித்து வந்தேன். இதற்குள் இப்படியா? இது என்ன அவன் விளையாட்டா? தெரியவில்லையே" என்று கதறினாள் லீலாவதி. ஸாது மிகவும் சோர்ந்தவனாய், "லீலாவதி நம்மை அந்த ஸத்யநாராயண மூர்த்திதான் இப்படிச் சோதிக்கிறார். நாம் குழந்தை பாக்கியத்திற்காகப் பிரார்த்தித்து குழந்தை பிறந்ததும் செய்வதாக இருந்த ஸத்யநாராயண விரதத்தை அனுஷ்டிக்காததால் நான் துன்பங்களை அடைந்து விட்டோம் வரும் வழியில்தான் அந்த அவதார புருஷன் எனக்குத் தரிசனம் தந்து எனக்கு நல்ல புத்தியைக் கொடுத்து அருள் வழங்கினார். ஊர் திரும்பியதும் விரதம் தொடங்குவதற்காக வந்து என்னை இப்படிச் சோதித்துவிட்டாரே. என் மருமகனை அந்த நாராயணன்தான் திருப்பித் தரவேண்டும்" என்று கூறித் தன் கண்ணை மூடிக் கண்ணீர் முத்து முத்தாய் உதிர பகவானை வேண்டினான். லீலாவதியின் மடியில் இருக்கும் கலாவதி முன் நின்று கண்ணீர் மல்க, வேண்டிய ஸாதுவின் கண்ணீர்த் துளிகள் கீழே சிந்தாமல் மகள் கலாவதியின் முகத்திரையில் பட்டுத் தெறித்தன. அவன் கண்ணீராலேயே அவள் மயக்கம் சிறிது சிறிதாகத் தெளிந்து எழுந்தாள். அப்பொழுது, "ஹே ஸாது! உன் மருமகன் கிடைக்க வேண்டுமென்றால் உன் மகள், தன் கணவனைக் காண வேண்டிய அவசரத்தில் மறந்து புசிக்காமல் வந்த என் விரத பூஜையின் பிரஸாதத்தை வீட்டிற்குச் சென்று புசித்துப் பின் திரும்புவாளேயானால், நீங்கள் மறுபடியும் உங்கள் மருமகனைக் காணலாம் என்று அசரீரியாகக் கூறினார். அதைக் கேட்ட கலாவதி, தான் செய்த தவற்றை உணர்ந்து, வீட்டிற்கு ஓடோடிச் சென்று நாராயணனின் பாதத்தில் விழுந்து மன்னிக்கும்படி வேண்டி, பிரஸாதத்தை உண்டு அவரை வலம் செய்து பின் கரைக்குச் செல்ல, கப்பலின் அருகில் கணவன் நிற்பதைக் கண்டாள். உறவினர்களையும், மற்றவர்களையும் அழைத்து, புரோஹிதரைக் கொண்டு மிகவும் விமரிசையாக ஸத்யநாராயண விரதத்தை அங்கேயே கொண்டாடினான் ஸாது. பிரஸாதத்தை அனைவருக்கும் கொடுத்துத் தானும் உண்டு மகிழ்ந்தான். அன்று முதல் அவன் வியாபாரத்தில் லாபம் பெருகியது. கஷ்டம் என்பதே என்ன என்று மறந்துபோகும் அளவிற்குச் செல்வம் பெருகியது. வாழ்வில் மகிழ்ச்சியாகத் தன் குடும்பத்தோடும் உறவினர்களோடும் சேர்ந்து வாழ்ந்தான். மாதம் தவறாது பௌர்ணமியன்று ஸத்யநாராயண விரதத்தை அனுஷ்டித்து வந்தான். பகவானின் தரிசனம் பெற்று, அவன் விரதத்தையும் மேற்கொண்ட ஸாது இறுதியில் மோக்ஷமடைந்ததைக் கூறவும் வேண்டுமோ! நாராயணன் ஸாதுவின் வாழ்க்கையில் விளையாடி அவனுக்கு அருள்புரிந்து மோக்ஷத்தை அடையச் செய்த கதையைக் கூறி முடித்த ஸூதர், "ரிஷிகளே! அவன் அருளை பக்தி இருந்தால் சுலபமாகப் பெறமுடியும். அதே சமயம் ஆணவம் கொண்டு தன்னை அலட்சியம் செய்தவர்களின் தவறுகளை அவர்களுக்கு உணர்த்த அவன் செய்யும் விந்தைகளைத்தான் யாரால் அறிய முடியும்" என்று கூறி, துங்கத்வஜன் என்ற அரசனின் கதையைக் கூறத் துவங்கினார்.

 

ஐந்தாவது அத்தியாயம்

துங்கத்வஜன் என்னும் அரசன் வேட்டையாடி திரும்பும் வழியில், அங்கு ஸத்யநாராயண பூஜை நடத்தும் சில இடையர்கள் பூஜையை முடித்துவிட்டு ப்ரஸாதத்தை ராஜாவிற்கும் அளிக்க, அதை உண்ணாமல் நாடு திரும்பினான். ஸத்யநாராயணர் நாடு திரும்பியதும் அவனின் மனைவி, மக்கள் காணாமல் போனதுபோல் தோன்றச் செய்தார். ஆகவே தவற்றை உணர்ந்த அரசன் காட்டுக்குச் சென்று இடையர்களுடன் கூடி ஸத்யநாராயண விரதம் மேற்கொண்டு திரும்பியதும் தன் மனைவி, மக்கள் தன்னை வரவேற்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தான்.

 

ஆணவத்தை அழித்த ஸத்யதேவன்

துங்கத்வஜன்என்ற அரசன் தன் மக்களைக் கண்ணை இமை காப்பதுபோல் காத்து வந்தான். ஒருமுறை அந்த அரசன் காட்டுக்கு வேட்டைக்காகச் சென்றவன், மிருகங்களை துரத்தி வெகு தூரம் சென்றான். அதனால் அவனுக்கு களைப்பு ஏற்படவே, வழியில் ஒரு வில்வ மரத்தடியில் ஓய்வு எடுக்கலானான். அப்பொழுது ஸத்யநாராயண விரதம் அனுஷ்டித்துக் கொண்டிருந்த இடையர்கள் விரதம் முடிந்ததும் பிரஸாதத்தை ராஜாவிற்கு கொடுத்து, தாங்களும் உண்டனர். ஆனால், 'இடையர்கள் அளித்த பிரஸாதத்தை தான் உண்பதா' என்றெண்ணிய ராஜா உண்ணாமலேயே தன் நாடு திரும்பினான். மன்னாகியவன் தன் மக்களிடையே வேற்றுமை பாராட்டக் கூடாதென்பதையும், தன் பூஜையை அலட்சியப்படுத்தியதின் தவற்றை உணர்த்த ஸத்யநாராயணர் அவனை சோதனைக்கு உள்ளாக்கினார். அதாவது மன்னன் நாடு திரும்பியதும் அவனுக்கு தன் மனைவி மற்றும் மக்கள் காணாமல் போனதாக காட்சியளிக்கச் செய்தார். அப்பொழுது நான் இவ்வாறு துன்பப்பட என்ன தவறு செய்தேன் என்று எண்ணிக் கொண்டிருந்த அரசனுக்கு, அன்று காட்டில் நடந்த நிகழ்வுகள் நினைவுக்கு வந்தது. உடனே காட்டுக்குச் சென்று இடையர்களுடன் கூடி ஸத்யநாராயண பூஜையை முடித்து பிரஸாதம் உண்டு நாடு திரும்பிய அரசன், தன் மனைவி, மக்கள், தன்னை வரவேற்பதைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான். அன்றிலிருந்து ஒவ்வொரு பௌர்ணமியன்றும் ஸத்யநாராயண விரதம் அனுஷ்டித்து, ஸகல ஸம்பத்துகளுடன் வாழ்ந்த அரசன் இறுதியில் முக்தியடைந்தான். குறிப்பு : இந்த பூஜையை அனுஷ்டித்த அந்தணன், குசேலனாக பிறந்து, பகவான் கிருஷ்ணனுடைய நண்பனாக வாழ்ந்து அவருடைய அனுக்ரஹத்தைப் பெற்றான். விறகுவெட்டி குகனாக பிறந்து ராமருடைய வாயால் அவருடைய தம்பி என்ற அந்தஸ்தைப் பெற்றான். அரசன் உல்காமுகனோ தசரதனாக பிறந்து ராமனையே தன் மகனாகப் பெற்று இறுதியில் மோக்ஷமடைந்தார். வணிகனோ மோரத்வஜனாக பிறந்து தன் உடலின் மாமிசத்தை அந்தணனுக்கு தானமாக அளித்து பெரும் புகழும் பெற்றான். துங்கத்வஜன் அடுத்த யுகத்திற்கு ப்ரஹ்மாவாக பெரும் பதவி பெற்றார். ஓம் ஸ்ரீ ஸத்யநாராயணாய நமோ நம | எல்லாம் ஸ்ரீ ஸத்யநாராயண மூர்த்திக்கே அர்ப்பணம் | (கதை முடிந்ததும் தேங்காய், பழங்களை நைவேத்யமாக ஸமர்ப்பிக்கவும்.)

#SathyanarayanKatha #Devotion #Faith #Grace #Liberation #HinduStories #SpiritualWisdom #TamilDevotion #SacredNarratives #SpiritualJourney

 

ஸ்ரீ ஸத்யநாராயண விரத மஹிமை

🌸 புனர்ஜென்ம பாக்கியங்கள் – ஸத்யநாராயண பூஜையின் பலன்கள் 🌸
1. ஏழை அந்தணன் → குசேலர் (ஸுதாமன்)
ஆதாரம்: ஸ்ரீமத் பாகவதம்.
காசியில் ஏழையாக இருந்த அந்தணர், துவாபர யுகத்தில் கிருஷ்ணரின் நண்பராகப் பிறந்தார். வறுமையில் வாடினாலும், அவரது பக்தி கிருஷ்ணரிடம் அளவற்ற செல்வத்தைத் தருவித்தது.
2. விறகுவெட்டி → குகன் (வேடன்)
ஆதாரம்: வால்மீகி ராமாயணம்.
விறகு விற்றுப் பிழைத்தவர், அடுத்த பிறவியில் வேட்டுவ ராஜாவான குகனாகப் பிறந்தார். ராமபிரானுடன் ஐவராக இணைந்து, தம்பியாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.
3. உல்காமுகன் (அரசன்) → தசரத சக்ரவர்த்தி
ஆதாரம்: ரகுவம்சம் / ராமாயணம்.
நதிக்கரையில் விரதம் இருந்த உல்காமுகன், அயோத்தி மன்னனாகப் பிறந்து, பகவானே மகனாகப் பெற்றார். இதற்குக் காரணம் ஸத்யநாராயண பூஜை.
4. ஸாது (வணிகன்) → மோரத்வஜன் (மயில் துவசன்)
ஆதாரம்: மகாபாரதம் (அஸ்வமேத பர்வம்).
வணிகர் மன்னனாகப் பிறந்து, தன் மகனை பாதியாக அறுத்துத் தானம் கொடுக்க முன்வந்த உன்னத பக்தி எடுத்துக்காட்டாக இருந்தார்.
5. துங்கத்வஜன் (மன்னன்) → பிரம்ம தேவன்
ஆதாரம்: ஸ்கந்த புராணம் (ரேவா கண்டம்).
ஆணவம் விட்டு திருந்திய துங்கத்வஜன், அடுத்த கல்பத்தில் சிருஷ்டி கர்த்தாவான பிரம்ம தேவராக உயர்வு பெற்றார்.